தமது கற்பித்தல் பணிகள் தொடர்பாகப் பிரதிபலிப்புச் செய்து, தாம் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகளில் மாற்றங்களைச் செய்யும் ஆசிரியர்களுக்கு, செயல்நிலை ஆய்வு முறையியல் மிக முக்கியமானதாகும். ஆரம்பத்த தரங்களில் சுற்றல் கற்பித்தலை நெறிப்படுத்தும் போது தோன்றும் பிரச்சினைகளுக்காக தமது சொந்தத் தீர்வுகளைத் தேடுவதற்கு செயல்நிலை ஆய்வு"இன்றியமையாததாகும். ஆரம்ப வகுப்பறைப் பிள்ளை களில் பண்பு ரீதியான - தர ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், எதிர்பார்க்கும் மட்டத்தில் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை அடைவதற்கும், இடர்ப்பாடுகளை எதிர் நோக்கியிருக்கும் மாணவரை அவ்விடர்ப்பாடுகளிலிருந்து விடுவிப்பதற்கும் செயல்நிலை ஆய்வு (Action Research) முக்கியமாகின்றது.
செயல்நிலை ஆய்வு தொடர்பான நேர்வகையான மனப்பாங்குகள்
ஆசிரியருக்கு தமது செயலடைவு மட்டத்தை விருத்தி செய்து கொள்வதற்கு உதவும்.
செயல்நிலை ஆய்வு காரணமாக, தாம் விருத்தியடைவதோடு வகுப்பறைச் செயன் முறையையும் விருத்தி செய்து கொள்ளலாம்.
ஏனையோருக்குக் காட்டுவதற்காகவன்றி, இதய சுத்தியுடன் தாம் வெற்றி பெறுவதற் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
எமது பிரச்சினைகளையும் தேர்ச்சிகளையும் ஏனையோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாமாகவே மாற்று வழிகளில் அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தமது தோல்வியடைவு தொடர்ந்தும் நிகழ இடமளிப்பதைத் தவிர்த்து, அவற்றுக்குப் பதிலாக பிரதிபலிப்புச் செயன்முறையின் ஊடாக அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
தமது பிரச்சினைகள் தொடர்பாக ஏனையோரிடம் உதவி கோருவதற்காக, பெருந் தன்மையுடன் செயற்படல்.
செயல்நிலை ஆய்வின் குறிக்கோள்கள்
(1) கற்றல் சூழலைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி, கட்டியெழுப்பியவாறு விருத்தியடைதல்
(2) வகுப்பறையில் சிறந்த கற்றல் கற்பித்தற் சூழலை உருவாக்குதல்.
(3) ஆசிரியரின் பணிகளை மேம்படுத்தல்.
(4 ) அன்றாடம் வகுப்பறையில் தோன்றும் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறன் தனக்கே உண்டு என்பதையும், அது தனது பொறுப்பு என்பதையும் உணர்த்துதல்.
பிரச்சினை என்பது யாது?
ஆசிரியர் தனது வகிபாகத்தை ஆற்றும்போது காணப்படும் நிலைமைக்கும் (Extg Situation), எதிர்பார்க்கப்படும் நிலைமைக்கும் இடையில் இடைவெளியொன்று (Gap) தோன்றுவதுண்டு. அவ்விடைவெளியைப் பிரச்சினையாக இனங்காணலாம். இந்த இடை வெளியைக குறைப்பதற்காக ஆசிரியரின் தலையீடு அவசியமாகும். இவ்வாறாகப் பிரச்சினை களைத் தீர்ப்பதால் ஆசிரியர் விருத்தியடைவார்.
பிரதிபலிப்பு / ஆழ்சிந்தனை வெளிப்பாடு (Reflection)
யாதேனும் தொடர்பைச் செய்யும் ஒருவருக்கு நான் "எனது தொழிலை எந்த அளவு வெற்றிகரமாகச் செய்கிறேன்" என எண்ணிப் பார்க்க முடியும். நாளாந்தம் "எனது வகிபாகத்தைச் சரியாக நிறைவேற்றினேனா" என எண்ணி, தனது வலிவு நலிவுகள் பற்றி நினனவுகூர்ந்து அசைபோடுவதே பிரதிபலிப்பாகும் எனலாம். நினைவு கூர்தல், திரும்பி நோக்குதல் என்றவாறாகவும் இதனை அழைக்கலாம். இவ்வாறாகச் செய்வதன் மூலம், தான் தவறுவிட்ட இடங்களை நாளாந்தம் செப்பஞ் செய்தவாறு விருத்தியடையச் சந்தர்ப்பம் கிடைக்கும்.
செயல்நிலை ஆய்வின் இயல்புகள்
(1) நடைமுறையானது.
(2) ஈடுபாடு கொண்டது.
(3) மாற்றத்தை ஏற்படுத்தத்தக்கது.
(4) பொதுமைப்படுத்த முடியாதது.
(5) நெகிழ்ச்சியான செயன்முறையை உள்ளடக்கியது.
(6) விஞ்ஞானபூர்வமான முறைகளால் இறுக்கமாகக் கட்டுறாதது.
(7) கருளிச் செயன்முறையில் (Spiral) நடத்தப்படுவது.
செயல்நிலை ஆய்வின் படிமுறைகள்
(1) பிரச்சினையை இனங்காணலும் வெளியிடுதலும்
(2) அடிப்படையான தேடியறிகை (இனங்காணல்)
(3) அடிப்படையான தரவு சேகரிப்பு
(4) தரவு பகுப்பாய்தலும் ஆராய்ச்சி வினாக்களைக் கட்டியெழுப்புதலும்
(5) செயல்படுத்தல் திட்டத்தைத் தயாரித்தல்
(6) செயல்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (தலையிடல்)
(7)மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக தரவு சேகரித்தல்.
(8) தரவு பகுத்தாய்தலும் மதிப்பிடலும்
(9) கருளியின் அடுத்த வட்டத்தினுள் நுழைதல்.
செயல்நிலை ஆய்வு - வரலாறு
Action Research எனும் பதப் பிரயோகம் 1946 இல் Kurt Lewin (கர்ட் லெவின்) என்பாரால் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1950 களில் Stephen Corey செயல்நிலை ஆய்வுடன் அதனைத் தொடர்புபடுத்த முனைந்தார். 1960 இல் Lawrance Stenhous இனது Teacher as Researcher எனும் நூலில் ஆசிரியர் ஆராய்ச்சியாளராக இனங்காணப்பட்டுள்ளார். இதன் மூலம் பல வாய்ப்புக்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு 'நாம் ஆராய்ச்சியாளர்' என்றவாறு சிந்திக்குமாறு அறிவுறுத்தல் வழங்குதல்.
தமது பிரயோகம் தொடர்பான மிகச் சிறந்த தீர்ப்பாளர் தாமே என்பதை ஆசிரி யருக்கு அறிவுறுத்துதல்.
ஒவ்வொரு வகுப்பறையும் ஒவ்வோர் ஆராய்ச்சிக் கூடமாகும்.' எனவே ஒவ்வோர் ஆசிரியரும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
செயல்நிலை ஆய்வு வரைவிலக்கணங்கள்
செயல்வழி ஆய்வு என்பது,
“நிஜ உலகில் செயற்படும்போது செயல்களைச் செய்வதாலும், சற்றுத் தலையிடுவதாலும் பெறுபேறுகளை அணுகி நோக்குதலாகும்." (ஹல்சே)
செயல்நிலை ஆய்வு என்பது தொழில் சார்ந்த பிரயோகத்தை மேம்படுத்து வதற்காகவும், விருத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தத்தக்க ஓர் அணுகு முறையாகும். ஆசிரியரது தொழில்சார் பிரயோகத்தை மேம்படுத்துவதற் காகவும் விருத்தி செய்வதற்காகவும் செயல்நிலை ஆய்வைப் பயன் படுத்தலாம். (கொட்வின் கொடிதுவக்கு)
செயல்நிலை ஆய்வின் அனுகூலங்கள்
(1) மாணவரிடத்தே காணப்படும் சிறப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறிந்து, கல்வி நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கு இதன் மூலம் வழிகாட்டல் கிடைத்தல்.
(2) குறைந்த அடைவுமட்டத்தைக் காட்டுகின்ற மற்றும் வேறு நடத்தைப் பிரச்சினை கொண்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிடாது முன்கொண்டு செல்ல முடிதல்.
(3) கிடைக்கும் தரவுகளைப் பதிவு செய்து வைப்பதால் விளைதிறனுடையவாறு அவற்றைப் பயன்படுத்தலாம்.
(4) சிறுசிறு பிரச்சினைகளைக் கூட விஞ்ஞானபூர்வமாக ஆழ்ந்து நோக்குவதற்குத் தேவையான திறன் கிடைத்தல்.
(5) இதுவரையில் கவனஞ் செலுத்தப்படாத பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்த முடிதல்.
(6) யாதேனும் பிரச்சினை தொடர்பாக ஆழ்ந்து தேடல் நடத்துவதற்கும், நுணுக்கமான விடயங்களை அவதானித்து கற்றல் - கற்பித்தற் செயன்முறையின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் ஆர்வம் ஏற்படல்.
(7) ஆசிரியரின் உண்மையான பொறுப்புக்கள் தொடர்பாக மீளச் சிந்தித்துப் பார்ப்பதற் கும், அதனூடாக தொழில்சார் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்கிக் கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைத்தல்.
"தரமான கற்றலுக்கு செயல்நிலை ஆய்வு" எனும் நூலில் ஆரம்ப வகுப்பறையில் தாய்மொழிப் பாடத்தின் கீழ் தோன்றத்தக்க பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
(1) மெய்யெழுத்துக்களை இனங்காண இடர்ப்படல்.
(2) வாசிப்புத்திறனை மேம்படுத்தல் - தரம் 3
(3) உறுப்பமைய எழுத இடர்ப்படல் தரம் - 1
(4) உயிர்க்குறிகளை இனங்கண்டு வாசிக்க இடர்ப்படல்.
(5) உயிர்க்குறி உச்சரிப்பில் இடர்ப்படல்.
(6) அறிவைச் சரியாகப் பயன்படுத்த இடர்ப்படல்
(7) எழுத்துக்களைச் சரியாக எழுத இடர்ப்படல்.
(8) இரண்டு எழுத்துச் சொற்களை வாசிக்க இடர்ப்படல்.
(9) வரிகளுக்கு இடையே எழுத்துக்களை எழுத இடர்ப்படல்.
(10) எல்லாப் பிள்ளைகளுக்கு ஏன் நன்றாக எழுத முடியாது. (தரம் -3)
(11) உயிர்க்குறிகளைச் சேர்த்து எழுதுவதில் இடர்ப்படல்.
